தந்தை மகற்காற்று நன்றி

“Harilal was a fine boy, like all earthly things, Bapu’s glory too cast a shadow which became Harilal’s lot.”  — C.R.

முன்குறிப்பு: இந்த கட்டுரை “யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்” தொடர் வரிசையின் இரண்டாம் பகுதி. முதல் பகுதி இங்கே.

மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் (காந்தியை காந்தி என்று அழைத்தால் யாரும் அடிக்க வரமாட்டார்கள் ஆகையால், வேறு சிலரைப் பற்றி எழுதும்போது அவர்களுடைய சஹஸ்ர நாமங்களையும் சொல்லி வைக்க வேண்டி வரும் கட்டாயம் இந்தக் கட்டுரையில் இல்லை. காந்தி மேல் நிறைய மரியாதை உண்டு என்று சொல்லிக்கொண்டு காந்தியை காந்தி என்றே ரெஃபர் பண்ணுவோம் …) அவருடைய சீமந்தப் புத்திரனான ஹரிலால் காந்திக்கும் இடையேயான தீரா இழுபறிப் போராட்டம் (tug of war/war of attrition) பற்றி ஒரு படமும், ஒரு புத்தகமும் இந்த வாரம் பார்க்க/படிக்க நேர்ந்தது.

அப்பனுக்கும் மகனுக்கும் விரோதத்திற்கு அடிப்படைக் காரணம், ஹரிலாலின் `இங்க்லண்ட் போய் படித்து பாரிஸ்டர் ஆக வேண்டும்’ என்ற தீவிர அபிலாஷைக்கு காந்தி சற்றும் ஆதரவு காட்டாதது. “ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்குதவாது” என்ற தன் உறுதியான கொள்கையால், மேல் படிப்பு மட்டுமல்ல, தன் குழந்தைகளின் ஆரம்பப் படிப்பிற்கே ஆர்வம் காட்டவில்லை `பாரிஸ்டர்’ காந்தி.

`ஜெயில்’தான் என் தலையாய பள்ளி, நான் ஜெயிலில் கற்றுக்கொண்டது இங்க்லண்டில் கற்றுக்கொண்டதை விட பல மடங்கு. தேச சேவைக்கு ஏட்டுப்படிப்பெதற்கு ? என்பது அவர் வாதம்.

பெரியப்பா வீட்டில் இண்டியாவில் வளர்ந்ததால் ஹரிலாலுக்கு பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கவாவது பிராப்தம். தென் ஆஃப்ரிக்காவில் காந்தியுடனே ஆசிரமத்தில் வளர்ந்த மூன்று இதர மகன்கள் எழுதப் படிக்கக்கூடத் தெரியாத தற்குறிகளாகவே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் – காந்தியால், கஸ்தூர்பாவின் எதிர்ப்பை மீறி.

தேச சேவை, பரதேச சேவை என்று, எப்போதும் ஊர் சுற்றும், வீட்டில் இல்லாத அப்பா. ஆசிரமத்தில் ட்ரை லெட்ரினில் மலம் அள்ள இன்னும் ஒரு ஆள் தேவைப்பட்டதாலோ அல்லது சமையல் வேலை கவனிக்க உதவுவார் என்றோ, அல்லது இதர காரணத்திற்கோ காந்தி கஸ்தூர்பாவை ஆஃப்ரிக்காவிற்கு அழைத்துக்கொள்ள, தாய், தந்தை இருவர் கவனிப்பும், அரவணைப்பும் இல்லாமல், தன் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் வெவ்வேறு ஸ்கூல்களாக பந்தாடப்பட்டு, தட்டுத் தடுமாறி வந்த ஹரிலால் தென் ஆஃப்ரிக்காவிற்கு வந்தபோது பெரிய அதிர்ச்சி:

தன் தம்பியர் மூவரும் நிரட்சர குட்சிகளாய் (illiterate) வளர்ந்து வருவது!

தான் இங்க்லண்ட் போய் பாரிஸ்டராக வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெரும் முட்டுக்கட்டு –  காந்தியின் மனப்பாங்கால். பணமுடையாலும் கூட. ஆசிரமவாசிகள் யாரும் சொந்தமாக பணம் வைத்திருக்கக்கூடாது என்பது காந்தியின் விதிமுறை.

அதிர்ஷ்ட வசமாக, நண்பர் ஒருவர் `காந்தியின் மகன்களில் ஒருவர் பாரிஸ்டர் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப்’ என்று ஒன்று ஏற்பாடு செய்ய, ஹரிலாலின் கனவு துளிர்க்கிறது. காந்தியோ, அதை ‘ஆசிரமவாசிகளில் ஒருவர் பாரிஸ்டர் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப்’ என்று மாற்றச் செய்கிறார். இல்லையென்றால் தான் தன் சேவைக்கு கூலி வாங்கியதாகிவிடும் என்று காரணம் காட்டி. தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட சகன்லால், படிப்பை பாதியிலே விட்டுவிட்டு கழண்டுகொள்ள, மீண்டும் ஹரிலாலுக்கு நப்பாசை உதிக்கிறது.

என்ன பண்ணினார் காந்தி ? “நான் ஒரு இந்து. ஒரு பார்ஸி மாணவனை தேந்தெடுத்துப் படிக்க அனுப்பினால், அது மத நல்லிணக்க விஷயத்தில் ஒரு  இம்பாக்ட் க்ரியேட் பண்ணும்” என்று சொல்லி, ஒரு பார்ஸி மாணவனை பொறுக்கி அனுப்பி வைத்தார் !

மஹாத்மா பாருங்க ! வேறென்ன பண்ணியிருக்க முடியும் அவரால ?

ஹரிலாலின் சவப்பெட்டியில் காந்தி அறைந்த அடுத்த ஆணி, ராஜ்கோட்டிலும், போர்பந்தரிலும் இருந்த தன் பூர்வீக பாட்டன் சொத்தையெல்லாம், வேண்டாம் என்று துறந்து கையெழுத்துப்போட்டு, சொந்தக்காரர்களுக்குத் தானாகவே வலிய வந்து தாரை வார்த்துக் கொடுத்தது !

Screenshot from 2017-09-18 09:09:47

தன் குழந்தைகளைப் பற்றிய காந்தியின் கனவுதான் என்ன ?

கடும் எளிமை வாய்ந்த ஆசிரம வாழ்க்கை. உப்போ, சர்க்கரையோ சேர்க்காத (உண்மையில்) சப்பென்ற பத்திய சாப்பாடு மூன்று வேளையுமே. காலையில் தினம் `கட்டஞ்சாயும்’ ரொட்டித்துண்டும்; ராத்திரி கஞ்சி/கூழ். தன் பிரம்மச்சரிய விரதத்திற்கு `பால்’ பங்கம் விளைவிக்கிறது என்று கண்டதால், ஆசிரமத்தில் பாலுக்குத் தடை. படுக்கத் தலைகாணி லேது, மரத்தில் இழைத்த மணை மட்டும். கீழுக்கு ஒன்றும் மேலுக்கு ஒன்றுமாக இரண்டு போர்வைகள். அதிகாலையில் இருந்து ராவரை கடும் உடல் உழைப்பு. ஆசிரமத்தில் இருந்து எங்கே போகவேண்டுமானாலும் `பொடி நடையாய் போறவரே ! பொறுத்திருங்க, நானும் வாரேன்’தேன் . ஒரு வழி 20 மைலானாலும். ஆசிரமவாசிகள் சொந்தமாக காசு பார்க்கக்கூடாது. எல்லாம் பொது. எல்லா வேலையிலும் எல்லாருக்கும் பங்கு. சேவை, தியாகம், எளிமை … 

ஆசிரம வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் அதிர்ச்சி அளிப்பவை: தன் மகன் மணிலால் ஒரு ஆசிரமவாசிப் பெண்ணின் கூந்தலைத் தொட்டு ரசித்தான் என்பதற்காக – அடிக்கப்பட்டது மொட்டை, இரண்டு இளம் பெண்களுக்கு ! அண்ணலின் அந்தராத்மாவின் குரல் சொல்படி !

1970களில் ஈரோடில் செங்குந்தர் ஹைஸ்கூலில் படித்தபோது, செல்லப்பா என்று ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். ரொம்பவே பிராமண துவேஷி. பிராமணர்களை பாதி பீரியட் திட்டித் தீர்த்தபின், தமிழும் நடத்துவார்.

அருமையாக.

வள்ளுவர் ஏன் குறளில், அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம) பற்றி மட்டும் எழுதி வீடுபேறு (மோக்க்ஷம்) பற்றி எழுதவில்லை என்று செல்லப்பா வாத்தியார் தானே கேள்வியெழுப்பி தானே சொன்ன பதில்: “அற வழியில் பொருளீட்டி, அறவழியில் மட்டும் இன்பம் நாடினால், வீடு பேறு தானே கனியும்.”

காந்தி “அற வழியில் பொருளீட்டி அதையெல்லாம் துறந்து, அறவழியில் வீடு பேறு நாடினால் இன்பம் தானே கனியும்.” என்ற வகையில் வாழ்ந்திருக்கிறார்.

அறியாப்பருவ சந்ததியனரையும் வாழ வைத்திருக்கிறார் – அதே முறையில்.


What of Harilal himself ?

ஆசிரம வாழ்க்கை பிடிக்காமலும், அண்ணலின் வழிமுறைகள் பிடிக்காமலும், நொந்து நூலாகி இண்டியாவிற்குத் திரும்பிய ஹரிலாலின் கதை, ஹரிலாலின் கதையா அல்லது ஹரிச்சந்திரன் கதையா என்ற சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் ஒரே சோகமயம்.

மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கப்பாளம்; ஹரிலால் தொட்டதெல்லாம் களிமண்.

விட்ட படிப்பைத் தொடங்கினால், க்ளாஸில் இதர மாணவர்கள் எல்லாம் வயதில் பாதி. வயசாகிவிட்டதாலும், முன்னால் படித்ததெல்லாம் மறந்துவிட்டதாலும் பாடம் சுட்டுப்போட்டும் ஏறாத நிலை. காந்தி மகன் என்பதாலேயே கடை மட்ட வேலை வாய்ப்பு யாரும் தரத்தயாரில்லை. உயர் உத்தியோகத்திற்கு படிப்பில்லை. தொழில் செய்ய கையில் பணமில்லை. பூர்விக சொத்தையெல்லாம் அப்பா தாரை வார்த்தாகிவிட்டது. கடனை உடனை வாங்கி ஆரம்பித்த தொழில்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நொடித்துப் படுத்துக்கொள்ள, பக்கம் பக்கமாக கடன் தொல்லை. பேரிடியாக மனைவி அல்ப ஆயுஸில் காலி … என்று ஒரு series of unfortunate events !

என்ன ? ஹரிச்சந்திரன் கதையில் தேவர்களெல்லாம் திரண்டு வந்து “உன்னை பரிசோதிக்கத்தான் இதெல்லாம். எல்லாம் விளையாட்டுக்கு, லொலொலொலாய்” என்று சொன்னமாதிரி சொல்லவில்லை. 

விரக்தியாலும், சகவாச தோஷத்தாலும், குடிப்பழக்கம், விபசாரிகள் தொடர்பு என்று ஆரம்பித்து, கடன் கடலாகப் பெருகி, காசு கிடைக்கும், கன்னி கிடைக்கும் (72ஆ வெறும் 1ஆ தெரியவில்லை) என்று ஆசை காட்டப்பட்டதாலும், அப்பாவை `பழி வாங்க’ ஆசைப்பட்டதாலும், அப்துல்லா காந்தி என்று மதம் மாறி மௌல்வியாகவும் ஆகி, கடைசியில் எல்லாம் போய், வீடு வாசல் நாதி எதுவும் இல்லாமல், ஊர் ஊராய் அலைந்து திரிந்து, அப்பனுக்கு கொள்ளி வைக்கவிடப்படாமல் (குடி போதையால்), பம்பாய் சிவப்பு விளக்குப்பகுதியில் தெருவில் அனாதைப் பிணமாக சாவது ஹரிலாலின் டெஸ்டினி. 


“என் வழி தனீ-ஈ-ஈ-ஈ வழி” என்பது நம் நிகரற்ற நட்சத்திரத்திற்கு முன்னாலேயே காந்தி கடைபிடித்த மேட்டரே.

எதாவது ஒரு மாரல் டைலெமா என்றால், உடன் தன் பகவத் கீதை பிரதியை எடுப்பாருங்க அண்ணலு. கொஞ்ச நேரம் அப்படியே புரட்டிக்கிட்டிருப்பாரு. அப்பால, கண் மூடி மௌன நிஷ்டை. அவர் அந்தராத்மாவின் குரல் (inner voice) ஒலிக்கும் வரை உன்னித்துக் கேட்பாரு. குரல் ஒலித்தவுடன், பகலவனைக் கண்ட பனிபோல தீர்ந்தது பிரச்சினை!

அண்ணலின் அந்தராத்மாவின் குரல் ரொம்ப ஹை டெஸிபெல் குரலாக இருக்கும்போல. ஏன்னா, அக்கம் பக்கத்தோர், ஊராமுட்டு, சாதி சனம் அவைங்கவைங்களோட அந்தராத்மாவின் குரல்வளைகளில் இருந்து எழும்பும் எந்த ஒலியையும் எடுபடாது அடித்து முழுகித்தொலைத்துவிடும் சக்திகொண்டது.

யாரேனும் தப்பித்தவறி எதிர்கருத்து சொல்லி வைப்பது வம்பு – may prove to be a career limiting move. அல்லது உறவினரான பட்சத்தில், “இது உன் தப்பில்லையப்பா. என் தப்பு, உன்னை நான் தூய சேவை மனப்பாங்கோட வளர்க்க நான் தவறிவிட்டேன். அந்த தவறுக்குப் பிராயச்சித்தமாக நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” அப்படின்னு புறப்பட்டுடுவாரு !

அம்பேத்கர் தன் அராஜகத்தின் இலக்கணம் என்ற சொற்பொழிவில் சில பகுதிகளை காந்தியை மனதில் வைத்துச் சொன்னாரா என்பது என் நெடுநாள் சந்தேகம். 

கொண்டது விடா மூர்க்கனும் முதலையும் மட்டுமல்ல – மோகன் தாஸ் காந்தியுமே.

கீதை, கீதை என்று கட்டிக்கொண்டு அழுதவர் தன்னை இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டாரா என்று தெரியவில்லை:

 1. தந்தை என்ற வகையில் தன் கடமை என்ன ? `அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என்றால், யாருடைய `அவையம்’ ? உன் மதமா ? என் மதமா ? சம்மதமா ?
 2. If vanity is to be vanquished, what of the vainness to be known as the victor of vanity?

மஹாத்மா என்ற சிலுவையை சுமத்திவிட்டோம். பளுவில் சரிந்தது காந்தி மட்டுமல்ல.


எந்த ஒரு வாழ்க்கையுமே, எவ்வளவு மோசமானதானபோதிலும், முழுக்க முழுக்க அர்த்தமில்லாமில் போவதில்லை என்று படித்திருக்கிறேன்.

அண்ணல் அர்த்தராத்திரியில் சுதந்திரத்தை வாங்கிக்குடுத்தார். ஹரிலால் வாழ்க்கையால் யாருக்காவது லவலேசமாவது பயனுண்டா?

தானாடாவிடினும் தன் சதையாடும் வகையில் ஹரிலால் காந்தியின் பேத்தி சொன்னபடி: “It was because of Harilal that Gandhi let his other sons choose their own careers instead of working in the villages as he wanted them to do. He learnt from the mistakes he’d made with Harilal. And when Kanti decided to become a doctor, Gandhi readily agreed, asking his three sons to contribute towards his expenses.

இது பின்னாள் கதை. காந்திலால் காந்தி (ஹரிலாலின் மகன்) மெட்ரிகுலேஷன் எக்ஸாம் எழுதுவதில் மோகந்தாஸ் காந்திக்கு சற்றேனும் சம்மதமில்லை. காந்திலால் மெட்ரிகுலேஷன் படிக்க ஆசைப்படுவது தன் இதயத்தைத் தோட்டாவால் துளைத்தது போன்றது என்பதே காந்தியின் பொஸிஷன்.

பரீட்சை எழுத பம்பாய் போக காசு கேட்டபோது, காந்திலாலுக்குக் கிடைத்த பதில்?

“உனக்கு மெட்ரிகுலேஷன் அவ்வளவு முக்கியம்னா, வார்தாவிலிருந்து பம்பாய்க்கு நடந்தே போ !”


வாழ்க்கையில் விடைகள் இல்லாத கேள்விகள் பல. சில சம்பவங்கள் ஏன் இப்படி அவை நடந்தவகையில் நடந்தன என்பது அதில் ஒன்று. “விதி வலியது”, “நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையின் பயன்”, “ஆண்டவனின் திருவிளையாடல்/லீலை” என்றெல்லாம் தம் மனப்பக்குவத்தாலோ அல்லது பத்தாம்பசலித்தனத்தாலோ  அல்லது அப்பாவித்தனத்தாலோ ஏற்றுக்கொள்ள முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

அது இயலாத இதர பிறர், கடந்து போன காலச்சம்பவங்களை, நினைவுகள் என்ற சல்லடையில் போட்டு திரும்பத் திரும்ப சலித்து, சலித்து காரணங்களைத் துழாவித் தேடித் தேடித் தாமும் சலிக்கவேண்டியதுதான்.

வாழ்க்கை என்பது ஒரு கேணப்பயல் கிறுக்கிவைத்த கதை – கூச்சலும் குழப்பமும் ஜாஸ்தி, அர்த்தம்ன்னுப் பார்த்தா ஒரு புண்ணாக்கும் கிடையாது அப்படின்னு `மேலைநாட்டு காளிதாஸர்’ சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

நம் உள்ளூர் கவிஞர் வாக்குப்படி: “இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் – நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.”

கெட்டுக் குட்டிச்சுவராகித் தறுதலையாகியே தீருவேன் என்று ஒரு மகன் தவம் கிடந்தால் ஒரு அப்பனோ, ஆத்தாளோ, என்ன செய்ய முடியும் ?

ஒரு மயிரையும் புடுங்கமுடியாது (மன்னிக்கவும்) என்றுதான் தோன்றுகிறது.

`சாதுர்யமான வணிகர்’ அப்படிங்கறாங்க – தும்பை விட்டு வாலை பிடிக்கத் திணறியிருக்கிறார் காந்தி.


க்க்க்க்ரிரிரிரிரிரிங்க்ங்க்ங்க்ங்க்ங்க்ங்க் ….

இடைவேளை முடிந்து நாடகத்தின் இரண்டாம் `ஆட்ட’த்திற்கு பெல் அடித்து விட்டார்கள்.

உங்கள் பாத்திரத்தில் நடிக்க திரும்புங்கள்.

திரும்புகிறேன்.

பின்குறிப்பு:

 1. மகன் தந்தைக்காற்றுவதை `உதவி’ என்றும் தந்தை மகற்காற்றுவதை `நன்றி’ என்றும் வள்ளுவர் சொன்னதன் காரணம் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
 2. புத்தகம் சுமார். படம் பார்க்ககத் தக்கதாக இருக்கிறது. ஈராஸ்நௌவில் இலவசமாகக் கிடைக்கிறது.

Once upon a time, long long ago, so long ago, nobody knows how long ago … : Bedtime stories for `Sid the Kid’

(My P4 speech at the Toastmasters club a few weeks ago. Tamil version here)

Good afternoon toastmasters !

My son `Sid the Kid’ is almost 12 years old, in fact just a couple of weeks shy. Despite being a tweenager he is still babyish in some ways and one manifestation of that is his requests for bed time stories.

Based on my mood, I will read him some story book or narrate the same old story that I have told him hundreds of times before or come up with a moral story either self-concocted or otherwise – A fairly frequently recurring moral of course being, the importance of treating one’s father well in his old age 🙂 Hmmm. Don’t know why 🙂

On some occasions if my intuition informs me that he is going to demand a story, I am known to jump the gun and bowl a googly at him thusly: “Siddhartha, why is it that I am the one who is always the story-teller. It is ENTIRELY unfair !!! It is YOUR turn today !” When he was a toddler, the stories he told me with his childish lisp and prattle still being intact, verily were milk and honey that flowed into my ears. There is a very famous couplet in my native language which when translated reads:

‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’ by them’t will be averred,
Who music of their infants’ lisping lips have never heard.

I can personally attest to the veracity of that claim, fellow toastmasters !

There then are also those days when I spin a yarn from my own childhood: About how life used to be in those days … about how we children would always cheerfully obey our father …, about how we would attend classes under a tree for lack of a proper class room in school … about how sometimes bird droppings from tree branches above, would plop on our heads … about how we children would always cheerfully obey our father 🙂 , about how we grew up without an iPad, TV, XBOX, laptop … about how we would manufacture a cricket ball by using cycle tube clippings, about how text books and clothes would be handed down from sibling to sibling …  about how we children would always cheerfully obey our father 🙂  …  Sid has a name for these stories. He calls them “Black and white stories” – Having watched old movies in TV, he seriously believed that the whole world was black and white till a few years ago !

I also have a few tricks up my sleeve for those nights he nags me for a story and I am truly exhausted. I will first extract a pinky promise from him saying: “Siddhartha, Appa is very tired; Nevertheless, because you ask I will still tell you a tale; but just one; No nagging for more ? Promise ?” and then do inky pinky ponky to select one from this carefully curated list of stories:

 1. Once upon a time there was a dog called Grover and the story is now over ! Good night !
 2. Once upon a time, there was a little boy. He asked his father for a story. His father said: “Sure, Once upon a time, there was a little boy. He asked his father for a story. His father said: “Sure, Once upon a time, there was a little boy. He asked his father for a story. His father said:  “Sure … (When my son understood the abstract concept of infinite recursion through this story, he was ALL OF SIX ! I had been observing his face closely: Once he comprehended what was happening, there was a mix of shame at being taken for a ride, amusement and moral outrage: “Appa-a-a-a-a-a-a-a ! THAT is cheating !!!)
 3. Once upon a time there was a farmer who sowed rice paddy in his field. One sparrow came there, plucked a grain of rice and flew away. Another sparrow came there, plucked a grain of rice and flew away. Another sparrow came there, plucked a grain of rice and flew away. Another sparrow came there, plucked a grain of rice and flew away. (… until he screams “Appa-a-a-a ! STOP !”)
 4. Once upon a time, there was this kingdom. It was night time and everybody was sleeping … If we continue the story, they will all get disturbed and wake up. So let us continue the story tomorrow. Good night !
 5. Once upon a time, there was a very sweet kid by name Sid. Oh wait, that is you and you know your story ! Good night !

And finally my favorite:

I: “Once upon a time, there were two good friends by name Dham and Dhum. If Dham wants to call Dhum, what would he say in Tamil ?”

Sid: “Vaa Dhum ?”.

“Vaa Dhum” in Tamil, my dear toastmasters, means “Come here Dhum”. So far so good.

I: “Great ! If Dham wants Dhum to go away, what would he say in Tamil ?”

Sid: “Po Dhum ?”.

“Po Dhum”, as you must have guessed, means “Go away Dhum” in Tamil and crucially also means “Enough!”

I: “Oh, you mean you have heard enough ? Alright then, good night !”

Dear toastmasters: Before you rush to pass judgement on my parenting, may I point out that I tell such stories only 7 nights a week ?

You may be familiar with the shortest telegraphic exchange ever: Oscar Wilde, the famous writer wanted to know how his just published book is fairing in the market place. He sent a telegram to his publisher comprising all of “?” and his equally eloquent publisher responded with all of “!

Likewise, you may also be familiar with the genre called flash stories: stories of extreme brevity, some times a story told in as few as six words ! ALL OF SIX WORDS ! You may also be familiar with 140 characters stories called twitterature.

Thus far, you heard the bedtime stories I tell Sid the Kid. Before I conclude, I want to tell you a story: A flash story; A moral story; An important story; A profound story; A story deeply relevant to all of us parents and just adults too in the present times:

“Not so long ago, there lived an active, healthy boy. One day, somebody gifted him a cell phone. The end.”

I urge you to ponder if this story is a comedy or a tragedy.

Thank you !

Good afternoon toastmasters !

shortest

 

 

He who must not be named

முன்குறிப்பு: Sorry to disappoint you fellow Potterheads ! This article is not about THE series despite the title and the picture below making it seem so.

இந்த கட்டுரை கடவுளையும், திருக்குறளையும், முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் பற்றியது. (இனி சுருக்கம் நிமித்தமாக கடவுளை கடவுள் என்றும், முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களை மு.க அவர்கள் என்றும் அழைப்போம்)

இந்த கட்டுரைக்கு வைக்க, முதலில் யோசித்த தலைப்புகள் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” மற்றும், “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”.  ஆனால் தமிழில் திரைப்படப் பெயர் சூட்டினால் சலுகை என்பது போல் (“உனக்கும் எனக்கும் something something” என்ற ஒரிஜினல் பெயரை “உனக்கும் எனக்கும்” என்று மாற்றியதால் கிடைத்த பெறும் பேறுகள்: 1. தமிழின் தழைத்தோங்கிய வளர்ச்சி 2. 12% வரி விலக்கு !) blog தலைப்பை தமிழில் வைப்பதற்கு எந்த மொக்கை வரி விலக்கும் கிடையாதென்பதால் (ஏங்க, 12% விலக்கு இல்லைன்னாலும் ஒரு 5% ஆவது வருமான வரி விலக்கக்கூடாதா ?), தேர்ந்தெடுத்திருந்த தமிழ் தலைப்புகளை விட பொருத்தமாகத் தோன்றிய ஆங்கிலத் தலைப்பு  இடப்பட்டது. ஆகையால், ஹாரி பாட்டரை மறந்து மேலே படிப்பீர் !

Image result for he who must not be named

சமீபத்தில் எதோ காரணமாக, திருக்குறளின் காமத்துப்பாலின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. முழுப்பாடலும் ஞாபகத்தில் இல்லை. காலேஜ் ஆரம்ப நாட்களில் ஸீனியர் ஸ்ட்யூடெண்ட்ஸ் `ராகிங்க்’ பண்ணும்போது சொல்லச்சொல்லிக் கேட்பார்கள் என்பதன் காரணமாக (என்பதன் காரணமாக மட்டும், என்பதன் காரணமாக மட்டுமேயேயன்றி வேறு காரணம் ஏதுமில்லைங்க்கோய்! 😉 ) படித்து வைத்த குறள். மறந்து போன பாதி செய்யுளை நினைவில் கொணர மூளையை துழாவி துழாவிப் பின் பயனில்லாமல் சலித்துப்போய், கூகிள் பண்ணிப் பார்த்தபோது திருக்குறள்.காம் என்ற ஒரு காம்ப்ரெஹென்ஸிவ் வெப்ஸைட் இருப்பது தெரிந்தது.

மு.க, மு.வ, சாலமன் பாப்பையா, பரிமேலகழர், மணக்குடவர், திருக்குறளார் வீ. முனிசாமி என்ற பல்வேறு ஆசிரியர்களின் உரை இங்கே ஒருங்கே படிக்கக் கிடைக்கிறது. மேலும், நல்ல கவிதைத்துவம் மிக்க, தரமான ஆங்கில மொழி பெயர்ப்பும் உண்டு. (திருவாசகத்தின் சில பல செய்யுள்களை மொழி பெயர்க்க நினைத்திருக்கும் சிநேகிதி can draw inspiration here. பானைக்கு ஒரு சோறு: கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது = The furtive glance, that gleams one instant bright, Is more than half of love’s supreme delight. இன்னும் ஒரு பருக்கை: கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல = When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless prove.)

ஒவ்வொரு குறளின் உரை வரிசையில் முதல் இடம் மு.க அவர்களின் உரைக்கு.

திரு மு கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல” என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்தை நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதில் நிச்சயமாக எனக்கு உடன்பாடில்லை.

நான் `தீவிர’ இலக்கியவாதியும் இல்லை. `மித’ இலக்கியவாதியும் இல்லை. நுனிப்புல் மேயும் சாதாரணன். மு.க அவர்கள் அடிக்கடி சொல்லும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு  என்ற கருத்தை ஏற்பவன். (ஐயையோ, மல்லிகா இல்லைங்க, மல்லிகை ! மல்லிகாவிற்கெல்லாம் மணமுண்டா என்றெல்லாம் யான் கண்டிலேன். கண்டாலும் விண்டிலேன் 🙂 ஆனாலும், “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” அப்படின்னு தமிழ் பேரறிஞர் ஒருத்தரு, ஆராய்ந்து கண்டறிந்து ஞாலத்தோர் உய்வடைய பறைசாற்றி இயம்பியிருப்பதால் அது உண்மையாக இருக்கலாம் –  ஷெ மல்லிகா சேலை கட்டும் மல்லிகா ஆன பட்சத்தில்). அதனால், மு.க அவர்களின் பல கொள்கைகளை ஏற்காதபோதும், அவர் இயற்றிய குறளோவியத்தின் சில பகுதிகளையும், தென்பாண்டிச் சிங்கத்தின் சில பகுதிகளையும் ஸ்கூல் போகும் பருவத்தில் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். (அறப்பால், பொருட்பால் உட்படங்க)

குறளோவியம் மு.க அவர்கள் தமிழுக்காற்றிய சிறந்த தொண்டு. (குறளோவியம் வேறு, குறளுக்கு மு.க அளித்த உரை வேறு என்பதை மனதில் வைத்து மேலே படிக்கவும்)

மு.க அவர்கள் குறளுக்கு உரை எழுத ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. பின்ன என்னங்க? எடுத்த எடுப்பிலேயே, முதல் அதிகாரமே, பகுத்தறிவுக்கு புறம்பான `கடவுள் வாழ்த்து’ ! வள்ளுவர் ஒரு சரியான லொள்ளுவர்!

கடவுள், இறைவன், ஆண்டவன், சாமி, தெய்வம், தேவன் அப்படின்னு எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தாமல், கடவுளை வாழ்த்துவது சுலபமா ? ஆனாலும் செய்து காட்டியிருக்கிறார் மு.க இங்கே ! மற்ற உரையாசிரியர்களெல்லாம் `உம்மாச்சி’ அப்படின்னு நேரடியாக கூப்பிட்ட பரம்பொருளை, மு.க அவர்கள் மேற்சொன்ன எந்த சொற்களையும் பயன்படுத்தாமல், “தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்”, “மலர் போன்ற மனத்தில் நிறைந்தவன்”, “விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவர்”, “இறைவன் என்பதற்குரிய பொருளைப் (?) புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்”, “மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவன்”, “ஒப்பாரும் மிக்காருமில்லாதவன்”, “அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோர்”, “ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவன்”, “தலையானவன்” என்றெல்லாம் `ஐயே மெத்த கடினம்’ பட்டுச் சுற்றி வளைத்து வர்ணித்துத் தள்ளியிருக்கிறார்.

ஆனால், அதனால என்ன ? பேர்ல என்னங்க இருக்கு ? ரோஜாவை கூஜான்னு கூப்பிட்டா வாசனையில்லாமா போயிடுமா என்ன ?

பின்குறிப்பு: “அதெப்படி அது, கடவுள் சம்பத்தப்பட்ட கட்டுரையில், கடவுளை male pronounல் போடப்போச்சு? கடவுள் பெண்ணாயிருக்கக் கூடாதா? ஆய், ஊய்!” அப்படின்னு வரிந்துக் கட்டிக்கொண்டு இந்தக்கணத்தில் வசை பாடத் தயாராகும் அம்மணி அவர்களே: ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு “ஓம், ஷாந்தி, ஷாந்தி” என்று 12 முறை சொல்லிக் கொள்ளவும்.

நான் உள்ளபடியே தேவி(கள்) உபாஸகன்தேன் !  

 

 

 

 

 

 

 

 

விக்ரம் வேதனா

Image result

என் தம்பி ராம், அக்காவின்லா ஹேமா, எக்ஸ்-சகா சுரேஷ், நண்பி கே.பி என்று பக்கம் பக்கமாக பரிந்துரைத்த விக்ரம் வேதா-வை போன வாரம் அம்மா மற்றும் மகனுடன் பார்த்தேன். அதிகம் பரவசம் அடையாததற்கு, பின் வருவனவற்றுள் ஒன்றோ, பலவோ காரணமாக இருக்கலாம்:

 1. (கதைக்கு அத்தியாவசமானதேயானபோதிலும்) இடைவிடா தொடர் வன்முறை: பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் தலையில் சுட்டு சிதர் தேங்காய் கபால மோட்சம், கையில் ஓட்டை ட்ரில் போடுவது முதலான உற்சவங்கள் உண்டு, காணத் தவறாதீர் !  எங்கே, படத்தைப் பார்த்த உத்வேக/உற்சாகத்தில், என் பிள்ளையாண்டான் வீறு கொண்டெழுந்து தன் பள்ளிக்கூடத்தில் மூளைப்பலத்தை மட்டும் காட்டாது முஷ்டி பலத்தையும் காட்டிவைப்பானோ என்ற கவலை தலையாய ரசனை கொல்லியாக இருத்திருக்கலாம்.
 2. படத்தின் முக்கியக்கட்டத்தில் நான் பார்க்கக் கொடாதுபோன அந்த பதினைந்து நிமிடங்கள்: சுவாரஸ்யமான கட்டத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமலோ அல்லது தெரிந்தேதானோ என் மகளை அப்போதென்று பார்த்து ஒரு பூனை கடித்துவைத்ததும் அதன் காரணமாக தான் எதோ மரணப்படுக்கையில் இருப்பதுபோல ஓலமிட்டு என் மகள் பண்ணிவைத்த ஃபோன் காலும் ஒரு நிச்சய காரணி (factor) – கொஞ்சம் முன்னே பின்னே கடித்திருக்கலாம், அந்த சனியன் பிடித்த பூனை ! பக்கத்து வீட்டு அம்மாவைக் கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக ஏற்பாடு செய்து பின் வந்து உட்கார்வதற்குள், சீதைக்கு ராமன் சித்தப்பா ஆகிவிட்டார் படத்தில் ! (ஷெ பூனாய்ச்சியின் அப்பா, என் மகளை கடித்து வைத்ததற்காக, தன் குட்டிக்கு டெட்டனஸ்/ரேபிஸ் இஞ்செக்க்ஷன் போட ஏற்பாடு செய்ததா என்று தெரியவில்லை)
 3. மத்திய வயது டாம்ப்ராம் மாமிகள் விதிவிலக்கின்றி ஒவ்வொரு அம்மணியும், மாதவன் மற்றும் விஜய் சேதுபதி (மற்றும் ஆர்யா, மற்றும் … திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடிய பெண்மணியான பட்சத்தில், ஜார்ஜ் க்ளூனி, அன்டோனியோ பெண்டாராஸ் மற்றும் காலின் ஃபர்த் மற்றும்  .. (இந்தக் கட்டுரையின் நீளம் குறித்து பட்டியலை குறுக்கிக்கொள்கிறேன்)) அன்னவரைப் பார்த்து ஜொள்ளு விடுவது எனக்கு மிகவும் பொறாமையை கடுப்பைக் கிளப்பும் சமாச்சாரம். மாமிகள் இருவகை: மாதவனைப் பார்த்து ஜொ.விடுவோர் முதல் வகை. ஜொ.விட்டுவிட்டு I don’t care for Madhavan என்று கூடவே புருடாவும் சேர்த்து விடுவோர் மறு வகை. இந்த மாதவன் ரசிகமணி ஜொ. கும்பலில், சிற்சில மாமாக்களும் கூட சேர்த்தி என்று கேள்வி – யாமறியோம் பராபரமே ! அதெப்படியோ போகட்டுங்க. இந்த மேட்டர்ல என்ன ஒரு அநியாயம்னா, “எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்” என்று பாரதியார் கும்மியாடிப் பாடிப் பின் போய் சேர்ந்து பல மாமாங்கங்கள் ஆகிவிட்டபோதிலும், இன்றைய தேதியில் தனியொரு நடுத்தர வயது டாம்ப்ராம் மாமா ஒரு சதாவையோ அல்லது ஒரு யாமியையோ, ஒரு சனா கானையோ தூரத்தில் இருந்து ஆராதித்துப் பார்த்து வைப்பது பெரும்பொல்லாப்பு. அம்புடுதேன்: பேர் ரிப்பேரோ அல்லது கதை கந்தலோ ஆகி, lech என்ற போக்கமுடியாத கறை வந்து படியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்ன ஒரு அநியாய ஏற்றத்தாழ்வு பாருங்க ! அதுவும் 2017ல்!
 4. தமிழ் மேட்டுக்குடிக் கலாச்சாரத்தை மேலும் மேம்படுத்திப் பரவலாக்க டைரக்டர்கள் (புஷ்கர் மற்றும் காயத்ரி) காட்டியிருக்கும் முனைப்பு: “லைட்ஸ் !, காமிரா !, ஆக்க்ஷன் !” என்ற கூவலை “லைட் அப் !, காமிரா !, ஆக்க்ஷன் !” என்று சொல்லாமல் கொள்ளாமல் மாற்றிவிட்டார்களோ என்று சந்தேகிக்கும் வகையில், திரையில் தோன்றும் போதெல்லாம் மூச்சு விடுவதற்கு பதில் சிகரெட் புகையாகவே விட்டு ஊதித்தள்ளி சலிப்பூட்டும் காரக்டெர்கள்; வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன் குளித்துத் துருக்கித்துண்டில் தலை துவட்டிக்கொண்டு வெளிவரும்போதே கோப்பையில் ஐஸ் கட்டிகள் மிதக்க, ஸ்காட்ச் விஸ்கியை ரெடியாக வைத்திருக்கும் சகதர்மிணி (அட !, அட !, அட !) (தலைவன்-தலைவியின் இடையே காதலுக்கான கிரியா ஊக்கியே (catalyst) ஸ்காட்ச் தான். அம்மணி பாரில் ஸ்காட்ச் ஆர்டர் பண்ணும்போதுதான் அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கி என்னப் பொருத்தம், நமக்குள் என்னப் பொருத்தம் என்று டுயெட்டத் தொடங்குகிறார்கள். அதெல்லாமே பரவாயில்லை என்றவிதத்தில் கஞ்சா அடிப்பது இப்போதெல்லாம் எவ்வளவு வசதியாகப் போய்விட்டது என்று சாதாரண மேட்டராக காட்டி சிலாகித்திருப்பது கொடுமை ! சின்ன வயதில், “அண்ணனோ பெரியவன், தம்பியோ சிறியவன், சித்தப்பா, சுருட்டுக்கு நெருப்பு கொண்டு வா !” என்ற சொல்வழக்கைக் கேட்டிருக்கிறேன். இப்போதெல்லாம், தமிழ் சினிமாவில் மகன் சிகரெட்டைப் பற்ற வைப்பது அப்பாவாகாவும், ஸ்காட்ச் ஊற்றிக்கொடுப்பது மனைவியாகவும் ஆகிவிட்டது – பேஷ், பேஷ், என்னே முன்னேற்றம் !
 5.  படத்தை நான் குறைவாகவே ரசித்ததற்கு மேலும் ஒரு காரணம், வாயைத் திறந்தாலே தெனாவட்டாகத்தான் பேசித்தீர்ப்பேன் என்று தவம் மேற்கொண்டது போன்ற மாதவனின் எரிச்சலூட்டும் புடுங்கித்தனமான பாத்திரம். “ஒருத்தன் கண்ணைப் பார்த்தாலே, அவன் நல்லவனா, கெட்டவனான்னு கண்டுபுடிக்கத் தெரியணும்” அப்படின்னெல்லாம் சவடாலாகப் பேசிவிட்டு, கடைசியில் பார்த்தால், அவர் டிபார்ட்மெண்டிலேயே ஒரு ஆசாமி விடாது அத்தனை பேரும் ஊழல் பேர்வழியாக இருப்பது தெரியாமல் இருந்திருப்பது பரிதாபம்.
 6. கடைசியாக, கொஞ்சம் Quentin Tarantinoவை நினைவுபடுத்தும் aestheticization of violence. பட ஆரம்பத்தில் வரும் என்கவுண்டர் ஸீனில், கொடௌனுக்குள் நுழையும் முன்னால் மாதவன் தன் யூனிட் போலீஸாருடன் அல்ப விஷயங்களைப் பற்றி அடிக்கும் அரட்டை, பல்ப் ஃபிக்க்ஷன் படத்தில் வின்ஸெண்ட் வேகாவும், ஜூல்ஸ் வின்ஃபீல்டும் ஷூட் அவுட்டுக்கு முன்னால், அமெரிக்க மெக்டானல்ட்ஸுக்கும், ஃப்ரெஞ்ச் நாட்டு மெக்டானல்ட்ஸுக்கும் என்ன வித்தியாசம் என்று அரட்டை அடிப்பதை நினைவூட்டியது. 

நிற்க. இந்த படத்தில் காட்டுவது போல், நிஜமாகவே `என்கவுண்டர் யூனிட்’ என்றெல்லாம் இருக்கிறதா என்ன ? பரவலாக, அங்கங்கே என்கவுண்டர் `நடத்தப்படுவதாக’ கேள்விப்படுகிறோம். ஆனால் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பாணியில் முழு நேரத் தொழிலாக `போட்டுத்தள்ளும்’ கைங்கரியத்தையே சிரமேற்கொண்ட ஒரு யூனிட் இருப்பதாக சொல்லப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த என்கவுண்டர் சமாச்சாரம் எல்லாம் நடைமுறையில் இருப்பதும், அதை பலரும் ஏற்றுக்கொள்வதும் காலத்தின் கோலம்: “The law will take its own course” என்ற வாக்கியத்தை கூகிளில் தேடினால் கிடைக்கும் 43,300 பக்கங்களும் இந்தியா சம்பந்தப்பட்டவை என்று திண்ணமாக சொல்லிவிடலாம்.

சமீபத்தில் இந்த அபத்த வாக்கியத்தை திருவாய் மலர்ந்தருளியவர் அருண் ஜைட்லி.

ஐயா, அமைச்சர் திலகமே, அதுதானுங்களே பிரச்சினையே !

பின்குறிப்புகள்:

 1. “ஏன்யா, சதாவுக்கும், சனா கானுக்கும், யாமி கௌதமுக்கும் லிங்க் போட்டிருக்க, மாதவனுக்கும், ஆர்யாவுக்கும், மத்த ஆம்பிளைகளுக்கும் ஏன் லிங்க் குடுக்கலை ?” என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
 2. நான் அண்டாவை எட்டி உதைத்து பின் சில வருஷம் கழித்து `அப்பா என்னதான் எழுதி வச்சிருக்காரு’ என்ற ஆர்வத்தில் என் மகள் எழுத்துக் கூட்டி இந்தக் கட்டுரையை படித்து கோவப்படும் பட்சத்தில், இப்போதே மன்னிப்பு சாஸனமும் எழுதி வைத்து விடுகிறேன். உன்னைக் கடித்த பூனைக்கு ரேபிஸ் ஷாட் வேண்டும் என்று எழுதினதெல்லாம், விளையாட்டுக்காக. கோவிச்சுக்காத குட்டி !
 3. இவனுக்குப் போயி படம் ரெகமெண்ட் பண்ணேன் பாரு என்று நொந்துகொள்ளாமல், சிபாரிசுகளை தொடருமாறு சகல பந்து மித்ரர்களும் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். 

 

 

 

தீர்த்தமலை தீர்த்தாடனம்

இந்த வாரம் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள ஏலகிரிக்குப் போயிருந்தபோது, அங்கேயிருந்து ஒரு டிடூர் எடுத்து, தீர்த்தமலைக்கு ஒரு ட்ரிப் அடித்தேன். தீர்த்தமலை நான் ஏழு அல்லது எட்டு வயதுப் பையனாக இருந்த காலத்தில் என் அப்பா ஊத்தங்கரையிலோ, ஹரூரிலோ நீதிபதியாக இருந்தபோது அவருடன் போய்ப் பார்த்த இடம்.

ஆள் நடமாட்டமேயில்லாத காட்டுப்பாதையில் 10 கி.மீ ஒற்றை லேன் ரோடில் காரில் போய்ப் பின், கிட்டத்தட்ட 1 கி.மீ மலைப்பாதையில் பொடி நடையாய் ஏறினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருஷப் பழைய, தீர்த்தகிரீஸ்வரர் கோவில். சாயங்காலம் 6 மணிக்கு மிக முன்னரே போய் சேர்வது உசிதம் – நடையை கட்டும் நேரத்தில் போய் சேர்ந்தீர்களானால், சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பதிலாக உங்களுக்கு செய்வார் கோவில் பூஜாரி ! (உண்மையில் இந்த கோவில் மூடும் நேரம் 6 மணிதானா, அல்லது பூஜாரி ஓபி பேர்வழியா என்று யாராவது ஒரு ஆர்.டீ.ஐ பெடிஷன் போட்டுக் கண்டுபிடித்தால் புண்ணியமாய் போகும்)

இங்கே ராமர் சிவனுக்குப் பூஜை செய்யவேண்டி (மிஸ்டர் சுப்ரமண்ய ஐயங்கார்: தயவிட்டு நோட் மாடி), ஹனுமனை கங்காஜலத்தைக் கொணர அனுப்பினாராம். ஹனுமன் திரும்பிவரத் தாமதமானதால், ராமர் பக்கத்தில் இருந்த பாறை ஒன்றை அம்பினால் துளைத்து ஒரு நீரூற்றை உருவாக்கிக் கொண்டு பூஜை செய்ததாக, தல வரலாறு.

Image result for theerthamalai harur

கோவிலுக்குள் ராமர் தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம், குமார தீர்த்தம் என்று ஐந்து சுனை/ஊற்றுகள். இதில் ராமர் தீர்த்தம் வருடம் முழுதுமே வற்றாத ஊற்று என்கிறார்கள். மேலே ஒரு பாறையில் இருந்து கொட்டுகிறது ராமர் தீர்த்தம். On a whim, `நாம ஏன் கூச்சப்படணும், நம்மப் பார்த்து மத்தவங்க வேணா தாராளமாக் கூச்சப்படட்டும்’ என்று தொப்பையும் தொந்தியுமாக (what’s the difference ?) (முக்காலே மூணு வீசம்) திடீர் திகம்பரனாகி, ராமர் தீர்த்தத்தில் ஒரு குளியல் விட்டேன்.

ஐந்து நிமிஷக் குளியல் உண்டாக்கிய உற்சாகம் கொஞ்சம் பிரமிக்க வைத்தது – உடம்பெல்லாம் லேசாகி எதோ காற்றில் மிதப்பது போல ஒரு உணர்ச்சி: இதற்கு முன்னால் குற்றாலத்தில் அருவியில் குளித்தபோதும், நாபா பள்ளத்தாக்கில் எரிமலைக் குழம்பு மற்றும் வெந்நீரூற்றில் குளித்தபோதும் மட்டும் தான் இந்த மாதிரி சுகானுபவம்.

நிஜமாகவே இந்த ஊற்றுகளில் எதேனும் விசேஷ மூலிகைகள் இருக்கிறதா, அல்லது வியர்க்க விறுவிறுக்க மலையேறி பின், திறந்தவெளியில், லேசான கூதல் காற்று அடிக்க, பச்சை தண்ணீர் தலையில் வந்து மோதக் குளிப்பது ஒரு மஸாஜ் எஃபெக்டை உருவாக்கி உற்சாகத்தை உண்டு பண்ணுகிறதா என்று யாராவது ஒரு controlled double blind experiment பண்ணிக் கண்டுபிடித்தால் புண்ணியமாகப்போகும்.

Speaking of புண்ணியம், தீர்த்தமலையில் தீர்த்தாடனம் பண்ணினால், செய்த பாவங்கள் எல்லாவற்றிலும் இருந்து விமோசனமாம்: சித்ரகுப்தனுக்கு SMS போய் சேர்ந்து லெட்ஜரில் டெபிட் என்ட்ரி அம்புட்டும் வைப்-அவுட் ஆகியிருக்கவேண்டும் ஏற்கெனவே.

எனவே இன்றைய தேதியில் நான் ஒரு அப்பாவி. உங்களுக்கே தெரியும்: நான் `எந்த தப்பும் செய்திட மாட்டேன், ஆனால் தண்டா மாத்திரம் செய்வேன்’.

வரும்கால `தண்டா’க்கள் எல்லாம் புதுக்கணக்கு !

பின்குறிப்பு: சுதந்திர தின விழாவில் பாகவதராக அவதாரம் எடுக்க முடிவு செய்து பாரதியார் பாட்டு ஒன்றைத் தயார் செய்து வைத்திருந்தேன். சரியாக நான் பாட ஆரம்பித்தவுடன், சொல்லிவைத்தது போல, பக்கத்தில் இருந்த முருகர் கோவிலில் ஆடி கிருத்திகை காரணமாக டீ.எம்.எஸ் பாட்டை சத்தமாக போட்டு வைத்தனர். எனக்குப் பின்பாட்டுக்காரர் என்ற வகையில் டீ.எம்.எஸ் ரொம்பவே சொதப்பி விட்டார் ! சுத்த வேஸ்டுங்க. நல்ல வேளையாக நான் பாட ஆரம்பிக்கும் முன்னாலேயே, “பசங்களா, ஆலங்காயம் வரைக்கும் கேக்கிற மாதிரி முதல்லயே கை தட்டிடுங்க. அப்பதான் நான் பாடுவேன்” என்று சொல்லி (மிரட்டி?) அப்ளாஸ் வாங்கிக்கொண்டது நல்லதாப் போச்சு !

No means नहीं ! बिल्कुल !

`சுதந்திரத்தின் விலை ஓய்வொழிச்சலில்லாத கண்காணிப்பு‘ என்று கேட்டிருக்கிறேன். ஆனால் நம்ம பெங்களுரின் `நம்ம மெட்ரோ’ ஸ்டேஷன்களிலும், வண்டிகளிலும் பெயர் பலகைகளில் இங்கிலீஷ், கன்னடம் மட்டுமல்லாது, ஹிந்தியும் பயன்படுத்தப்படுவது பற்றிக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பைப் பார்த்தபோது, knee-jerk reaction is the price of liberty என்று யாரும் சொல்லி வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது. 

இது எந்த வகையில் ஹிந்தி திணிப்பாகும் என்று புரியவில்லை. டீவியிலும், பத்திரிக்கைகளிலும், இதர மீடியா சாதனங்களிலும், தம் பெயரோ இல்லை தத்தம் சுந்தர வதனமோ அடிக்கடி இடம் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அவஸ்தைக்குள்ளான சில `கருத்து சொல்லி பெருந்தலைகளால்’ (talking heads) உற்பத்தி செய்யப்பட்ட உபத்திரவம் இது என்பது எ.மி.தா.க.

பெங்களுருக்கு பஞ்சம் பிழைக்க வரும் பரதேசிகள் பரதேசத்தினர் பலரும் கன்னடம் கற்க சற்றேனும் முயல்வதில்லை என்ற கன்னடிகர்களின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் அந்த அவல நிலையை மாற்ற கன்னட பிரசாரத்திற்கு வழி பார்க்கவேண்டுமேயல்லாது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக, இல்லாத இடத்தில் எல்லாம் திணிப்பை கற்பித்துக் கொண்டிருப்பது அர்த்தமற்ற விஷயம்.

Image result for anti hindi agitation

கன்னட பிரசாரத்திற்கு என்ன வழி என்றால், கர்நாடக எல்லைக்குள் இருக்கும் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும், 5ம் கிளாஸ் வரை கன்னட மொழிபோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். அது ஆனானப்பட்ட இண்டெர்நேஷனல் போர்டோ, இண்டெர்காண்டினெண்டல் போர்டோ, இண்டெர்காலக்டிக் போர்டோ ஆனாலும். 5ம் கிளாஸ் வரை சொல்லிக் கொடுக்கப்படும் கன்னடம், practical, functional மொழி போதனையாக அமைக்க வேண்டும். 6-12 கன்னடம் படிக்காதோர், இந்த 5ம் வகுப்பு வரை படித்த கன்னடம் ஸிலபஸில் 6-12 வரை திரும்பத் திரும்ப பரீட்சை எழுத வேண்டும்.

தரமான கன்னடப் படங்களும் உதவும்.

முன்னர் நான் இதே கருத்தை இங்கே தமிழ் பற்றி சொன்னபோது, `கட்டாயப்படுத்தி எல்லாம் படிக்க வைக்கக்கூடாது – அது ஒரு விதத்திலும் உதவாது’ என்ற ஒரு ஆட்சேபணை என் காலேஜ்மேட் பாலாவிடம் இருந்து வந்தது. அது சரியல்ல என்பது என் அபிப்ராயம். “ஐயையோ ! English, Science, Math, History, Geography எல்லாம் படிக்க கட்டாயப்படுத்தறாங்க !” என்றோ, அல்லது “என்ன அநியாயம் பாருங்க, 10வது பாஸ் பண்ணா தான் 11வது போலாம் அப்படின்னு சட்டம் பேசறாங்க !” என்றோ அல்லது “English ஒரு லாங்க்வெஜ் படிச்சா பத்தாதா? என்னத்துக்கு ஸெகண்ட் லாங்க்வெஜும், தர்ட் லாங்க்வெஜும் ? என்றெல்லாம் யாரும் புகார் சொல்வதில்லை (என் மகனைத் தவிர 🙂 )

தாய்மொழி மற்றும்/அல்லது வட்டார  மொழியைக் கத்துக்கங்கப்பா அப்படின்னா மட்டும்தான் பிலாக்கணம் பிடிக்கிறோம்.

நிற்க. இங்கிலிஷ் மற்றும் கன்னடத்தில் ஏற்கெனவே எழுதிவைத்து கூடவே ஹிந்தியிலும் எழுதினால் அது எப்படி திணிப்பாகும் ?

எனக்கு ராஜாஜி மீது மதிப்பு அதிகம் உண்டு. ஆனால், அவர் ஆட்சியில் 1937ல் `சென்னை ராஜதானி’யில் ஹிந்தி மொழி படிப்பு கட்டாயமாகப் புகுத்தப்பட்டது நாட்டையே சிதறு தேங்காய்போல் சிதைத்திருக்கக்கூடிய `நல்ல நோக்கத்துடன் போடப்பட்ட, ஆனால் நரகத்தில் போய்முடியும் நடைபாதையே‘ என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அது போலவே, 1963ல் ஹிந்தி தனித்தலைமை ஆட்சிமொழியாக வர இருந்த நிலையும்.

திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்தவை என்பது என் ஆழ்ந்த அசைக்கமுடியாத அபிப்ராயம். ஆனாலும் இரண்டு சமாச்சாரங்களில் நாட்டிற்கு மகத்தான சேவை (yeoman service) இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளால்: ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு விஷயத்திலும் மற்றும் மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு விஷயத்திலும். (பழைய மூட நம்பிக்கைகளை களைய வழிகோலி, பின் வேறு புதிய மூட நம்பிக்கைகளை நிலை நாட்டினாலும்)

`தமிழர் எதிர்ப்பு’ என்பது அரசியலாக்கப்பட்டு அவ்வப்போது தலைதூக்கினாலும், கன்னடிகர் நிச்சயமாகவே தேசிய/பரந்த கண்ணோட்டம் அதிகம் உள்ளவரே. பெங்களூரில் காமராஜ் ரோடு உண்டு; ராஜாஜி நகர் உண்டு; ரவீந்திர கலாக்ஷேத்ரா உண்டு. இந்த `இல்லாத திணிப்பிற்கு எதிர்ப்பு’ என்பது எல்லாம் தவிர்க்கத்தக்கவையே.

சென்னையில் கர்நாடகத்தின் புதல்வ/புதல்விகளின் பெயரில் எதேனும் உண்டா என்பதில் எனக்கு ரொம்ப சந்தேகம்தான் உண்டு.

`தமிழ்நாட்டின் தீராத அண்ணா மோகம்’ என்ற இந்தக் கட்டுரையில் சொன்னமாதிரி:   

… One day you will give directions for your home like this – after landing at Anna airport, take an Anna bus that goes to Anna nagar, get down at Anna bus stand, go to Anna avenue. take second left that is Anna street. the first right from there is Anna lane. get inside, the first building there is Anna illam. The house opposite is mine…

இருக்கும் தெரு, ரோடு, சந்து, நகர், பாலம், ஏர்போர்ட், பஸ், பஸ் ஸ்டேண்ட், பல்கலை கழகம் எல்லாவிலும்: `வாழ்க அண்ணா நாமம்’ ! தாராளமாக வாழட்டும், கூடவே மத்தவங்க நாமமும் கொஞ்சம் வாழட்டுமே.

பின்குறிப்புஇந்த இந்தித் திணிப்பு பற்றி எழுத நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேங்க. ஆனால் நேத்துக் காலைல என் மேல் நடந்த ஹிந்தி திணிப்பு எரிச்சலைக் கிளப்பி, என் சோம்பேறித்தனத்தை விரட்டி அடிச்சிருச்சு: காலைல, எங்க பில்ட்ங் ஜிம்முக்குப் போனா, இந்த ஹிந்திக்கார அம்மா பாருங்க, ஃபுல் வால்யூம்ல ஹிந்திப்பாட்டை ப்ளாஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. நான் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோக்கும் வகையில் முகத்தில் எக்ஸ்ப்ரெஷன்லாம் குடுத்து என்னோட டிஸ்ப்ளெஷரைக் காட்டிக்கிட்டே இருந்தேங்க. ஆனா அந்த கல்லுளி மங்கம்மா கண்டுக்கவேயில்லை. நல்ல பாட்டானாலும் பரவால்லை. எல்லாம் கடஞ்செடுத்த டப்பாவா, பப்பி லஹரிப் போட்டப் பாட்டாக் கேக்கிறாங்க அவங்க. அப்புறமா, “என்னங்க, ஹெட்ஸெட் கொண்டு வரலயா ?” அப்படின்னு நேராவே கேட்டேன். “எனக்கு ஹெட்ஸெட்ல பாட்டு கேக்கப் படிக்காது; உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருந்தா வால்யூமை கம்மி பண்றேன்” அப்படின்னுட்டு முழுசா ஒரு பாயிண்ட் வால்யூம் கம்மி பண்ணாங்க ! நான் யார் சண்டைக்கும் வலியப்போக மாட்டேன்; ஆனால் வந்த சண்டையை விட மாட்டேங்க. ஆனாலும் கோபப்படறதில்லை அப்படின்னு முடிவெடுத்திருக்கிறாதல கடுப்பைப் காட்டாமே வந்துட்டங்க. ஆனா நம்மளுக்குள்ள என்னத்துக்குங்க ரகசியமெல்லாம். அதனால என் மண்டை காய்ச்சலைப் பட்டுன்னு போட்டு உடைச்சே சொல்லிடறேன்:

ஹிந்தி திணிப்பு ஒழிக ! ஹிந்தி திணிப்பு மேடம் ஒழிக !

(ஹிந்தி வாழ்க !)

 

 

 

 

 

 

பொன் செய்யும் மருந்து

சமீபத்தில், சாலத் தவிர்த்திருக்கத்தக்க, ஆனால் என்னால் தவிர்க்கக் கையாலாகது போன விஷயத்தில், ஒரு அலட்சியப்படுத்திவிட முடியாத தொகையை என் அபிமான தருமஸ்தாபனமான மத்திய கருவூலத்திற்கு வரியாக கொடையாகக் கொடுக்கவேண்டிய நிலை வந்திருக்கிறது. நான் கட்டும் வரியில் தான் அரசாங்கப் பள்ளிகளும், ஆஸ்பத்திரிகளும் கட்டப்படுவதாகவும், நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் சொன்னபடி விரயமாவதெல்லாம், இதரர் வரிப்பணம்தான் என்றும் ஒரு சப்பைக்கட்டு மனச்சமாதானம் செய்துகொண்டேன். 

போகட்டும் – வாதாபி ! ஜீர்ணோ பவ !

நல்ல விதமாக,  as இடிs go, இது ஒரு கன்னத்தில் கை வைக்கவைக்கும் கப்பல் கவிழ் வகை பேரிடி அல்ல. தலைப்பாவையும், கொஞ்சம் தலைமுடியையும் பிய்த்துக்கொண்டு, சில சிராய்ப்புகளுடன் விட்டுவிட்ட சிற்றிடி. என்ன, கொஞ்சம் நம்பிக்கை துரோகமும் இந்த மேட்டரில் கலந்திருப்பதால், லேசான வலி – தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டியது போல.

Image result for alchemist

நேற்று, என் சித்தி தன் வயிற்றைக் கழுவிப் பெற்றெடுத்த மாணிக்கமான என் தம்பி ராம் (நையாண்டியாக சொல்லவில்லை, நிஜமாகவே நவயுக பக்த பிரலாஹதன் ராம்) 

மனை உண்டு, மதி உண்டு, மக்களுண்டு, சதியுண்டு, கை தும்ப ஹண உண்டு, அந்திகே எமன தூதரு பந்து எந்துத எழவாக நீனு ஒப்பனே காயபேக்கோ கிருஷ்ணா! (cf. பட்டினத்தாரின் ஊரும் சதம் அல்ல)

என்ற புரந்தரதாஸர் கீர்த்தனையின் ரெண்டிஷன் ஒன்றை வாட்ஸப்பில் ஃபார்வர்ட் பண்ணியிருந்தான். (பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் – நான் தேடியமட்டும் பாடல் வரிகள் கிடைக்கவில்லை; சுட்டினால், திருத்திக்கொள்வேன்)

அந்த அளவிற்கெல்லாம் முதிர்ச்சி நம்மகிட்ட கிடையாதுங்கோ ! நம்ம லெவலில், இந்த சிச்சுவேஷனுக்கான பாடல் பின் வருவனவற்றுள் எது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்:

 1. ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன், உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி, என் கண்மணி, ஞானம் பொறந்திடுச்சு, நாலும் புரிஞ்சிடுச்சு,  கண்மணி, என் கண்மணி !
 2. நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி – அதில் வாழ்வதில்லை நீதி.
 3. நல்ல மனம் வாழ்க ! நாடு போற்ற வாழ்க ! தேன் தமிழ் போல், வான்மழை போல், சிறந்து என்றும் வாழ்க !
 4. மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி, என்னைத் தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி !

(எல்லாப் பாட்டும் யேசுதாஸாக இருக்கக் காரணம்: இன்று `ஜிம்’ போனபோது போட்டுக்கேட்டது அவர் பாடல் வரிசை. அதும் தவிர, கொஞ்சம் தத்துவ வாசனை வீசினாலே, “கூப்பிடுயா யேசுதாஸை!” அப்படியெனும் தமிழ் பட ம்யூஸிக் டைரக்டர்கள்)

முன்னொரு முறை சொன்னபடி, நமக்கு சேர வேண்டிய ஒவ்வொரு அரிசியிலும் நம் பேரை ஆண்டவன் எழுதியிருப்பார் என்பது உண்மையெனும் பட்சத்தில், எனக்கு ஆண்டவன் நிறையவே அரிசி படியளந்திருப்பதாக ஒப்புக்கொள்கிறேன். (`அதேன் உன்னை பார்த்தாலே பளிச்சுன்னுத் தெரியுதே’ அப்படின்னு இளக்காரமா சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவருங்க 😦 ) 

சில மாதங்கள் முன் எங்கள் பேட்டை டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்பில் ‘Personal finance 101‘ என்ற தலைப்பில் ஒரு ஸ்பீச் கொடுக்க நேர்ந்தது. (நான் ஒரு `க்வாலிஃபைட் பட் நான்-ப்ராக்டிஸிங்க்’ பெர்ஸனல் ஃபைனான்ஸ் அட்வைஸர். `அப்புறம் ஏன்யா டாக்ஸ் மேட்டர்ல கோட்டை விட்ட ?’ என்ற உங்கள் வாஸ்தவமான கேள்விக்கு ஜவாபாக என்னத்தைச் சொல்ல ? விதி வலியது !) `டைமர் ரோல்டேகர்’ ஈ நுழைவது தெரியாமல் வாயைப் பிளந்துகொண்டு என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்து, பச்சை/மஞ்சள்/சிவப்பு அட்டைகளை அந்தந்த நேரத்தில் காட்ட மறந்ததால், ஏழே நிமிடம் பேசவேண்டிய நான் பேசியது மொத்தம் 32 நிமிடங்கள். அதற்குள் டைமர் சுதாரித்துக்கொண்டு வித வித கலர் அட்டைகளை உடனுக்குடன் காட்டியதால் கின்னஸ் ரெகார்டை உடைக்காமலே, மங்களம் பாட வேண்டியதாகி விட்டது 😦  

Anyways … அந்த ஸ்பீச்சின் ஆரம்பத்திலேயே, எனக்கு அதீத ஆதாயம் அளித்த என்னுடைய `பெர்ஸனல் பெஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ பற்றி டிப்ஸ் கடைசியில் தருவதாக பீடிகை போட்டுவைத்து, பின் இறுதியில் நான் பகிர்ந்துகொண்ட என் மூன்று முத்தான இன்வெஸ்ட்மெண்ட்ஸ்: (2004ல் நான் வாங்கிக் கொண்ட)

 1. firefox சைக்கிள்,
 2. ipod 
 3. ஷூஸ் !

`பொன் செய்யும் மருந்து’, வேண்டுவோர்க்கெல்லாம் இலவசமே. பொன்னைத் தேடுவதை விடுத்து பொன் செய்யும் மருந்தை நாடத் தயாராக இருக்க வேண்டும் – அது ஒன்றே நிபந்தனை என்று தோன்றுகிறது.